தமிழக சட்டசபை வரலாற்றில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, சபை நடவடிக்கைகள் ஒரு நிமிடம் கூட கட் செய்யப்படாமல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுமக்கள் தங்களது தொகுதி எம்.எல்.ஏ-க்கள் சபையில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வரும் சூழலில், தற்போது இந்த நேரலை ஒளிபரப்பில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, சட்டசபை நிகழ்வுகளை அப்படியே நேரலையாகக் காட்டாமல், சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்யும் “டெபர்ட் லைவ்” [Deferred Live] முறையைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திடீர் மாற்றத்திற்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, சபையில் நடக்கும் வாக்குவாதங்கள் மற்றும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாவதுதான்.
சபையில் உறுப்பினர்கள் யாராவது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போதோ அல்லது வரம்பு மீறிப் பேசும்போதோ, அந்தப் பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிடுவார்.
ஆனால், சபை நடவடிக்கைகள் நேரடியாக யூடியூப் போன்ற தளங்களில் ஒளிபரப்பாவதால், அந்தப் பகுதிகள் நீக்கப்படுவதற்கு முன்னரே பலரும் அதனைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பகிர்ந்து விடுகின்றனர்.
இது அவையின் மாண்பைச் சிதைப்பதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திமுக கொறடா எ.வ.வேலு இது குறித்து தனது ஆதங்கத்தைச் சபாநாயகரிடம் வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை ரீல்ஸாக வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இருப்பினும், இத்தகைய வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க தொழில்நுட்ப ரீதியாக 10 முதல் 15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று சட்டசபை செயலக வட்டாரங்கள் கருதுகின்றன.
இதன் மூலம், சர்ச்சைக்குரிய அல்லது நீக்கப்பட்ட பகுதிகளை எடிட் செய்த பிறகு மக்களுக்குக் காட்ட முடியும் என்பது அதிகாரிகளின் கணக்காக உள்ளது.
இருப்பினும், இந்த முடிவுக்குச் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டசபை நேரலை என்பது வெளிப்படைத்தன்மையின் அடையாளம் என்றும், அதனைத் தாமதப்படுத்துவது அல்லது எடிட் செய்வது மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதிக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சபை நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நேரலையைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தத் தாமதமான ஒளிபரப்பு முறை சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட உள்ளதா அல்லது நிரந்தரமாக அமல்படுத்தப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
