தமிழக வெற்றிக் கழகத்தில், தற்போது ஒரு புதிய புகைச்சல் கிளம்பியுள்ளது. அதிமுகவிலிருந்து பெரும் நம்பிக்கையுடன் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், தற்போது பதவிகள் எதுவும் வழங்கப்படாமல், ஒருவித விரக்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஒவ்வொரு சனிக்கிழமையும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர், தவெக-வில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தொடர்கதையாகி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ என, அதிமுகவின் தூண்களாக இருந்த பலரும், தவெக-வில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வந்த தாங்கள், தவெக-விலும் உடனடியாக அதே போன்ற பெரிய பதவிகளைப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், பனையூர் அலுவலகத்தில் நடப்பதே வேறு. கட்சியில் இணையும் இந்த சீனியர்களை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வரவேற்பதில்லை. “முதல்வர் முன்னிலையில்தான் கட்சியில் இணைவோம்” என்று சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் அடம்பிடித்தும் கூட, அது நடக்கவில்லை. அமைச்சர்கள் முன்னிலையில்தான் இணைப்பு விழா நடந்தது. இதுவே, அவர்களுக்கு முதல் அப்செட்.
இந்த நிலையில், கட்சியில் இணைந்து பல நாட்கள் ஆகியும், யாருக்கும் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது, அவர்கள் மத்தியில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர்களுக்கு ஒரு தெளிவான மற்றும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
“முதலில் களத்திற்குச் செல்லுங்கள். ஏற்கெனவே உள்ள 138 மாவட்ட அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து, தொண்டர்களிடம் இருந்து வரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே, உங்களுக்குப் பதவி வழங்கப்படும்” என்று தவெக தலைமை திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இது, பதவிக்காக மட்டுமே கட்சிக்கு வருபவர்களுக்கு, தவெக-வில் இடமில்லை என்பதை விஜய் உணர்த்தும் ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது. பெரிய தலைவர்களை விட, அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை இது காட்டுகிறது.
விஜய்யின் இந்த அதிரடி முடிவால், தவெக-வில் இணைந்த அதிமுக சீனியர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்களது ஈகோவை விட்டு, மீண்டும் முதலில் இருந்து களப்பணியாற்றுவார்களா, அல்லது இது தவெக-விற்குள் ஒரு புதிய கோஷ்டிப் பூசலை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
