அரசு டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்தின் சொக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக கிளை அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த காலங்களில் கோவையின் வளர்ச்சியை விட சில அரசியல் கட்சிகளும், அவர்களின் நிர்வாகிகளும் மட்டுமே பயனடைந்ததாக விமர்சித்தார். தற்போதைய பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்க்காத பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரமின்றி யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாது என்றும், அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார்மயமாக்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றாலும், அதுதொடர்பாக இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தினார். மேலும், கனிம வளங்களை முறைகேடாக கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு உறுதியாக செயல்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
