தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகள் அரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. ஆகஸ்ட் 5ஆம் தேதி 2026–27 நிதியாண்டுக்கான முதல் முழுமையான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் தேர்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், ‘அண்ணன் சீர்’ திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகுமா என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நகரம் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்ற அறிவிப்புகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டில் எல் நினோ போன்ற காலநிலை பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும். மக்களிடம் பெற்றுள்ள ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இந்த முதல் பட்ஜெட் கருதப்படுவதால், விஜய் அரசு வெளியிடும் அறிவிப்புகள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
