மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷியுடன் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இந்த உரையாடலின் போது, சர்வதேசக் கடல் வழிப்பாதைகளில் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளை எந்தச் சூழ்நிலையிலும் இலக்காகக் கொள்ளக் கூடாது என ஜெய்சங்கர் ஈரானை மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர் மோதல்கள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளதோடு, வன்முறையைக் கைவிட்டுத் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்தக் கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதல்களால் இதுவரை 10 மாலுமிகள் உட்பட மொத்தம் 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 75-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிகரமான தகவலை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியர்கள் இந்த உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
இந்தியக் குடிமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு தாக்குதலையும் எந்தத் தரப்பு நடத்தினாலும் அதனை இந்தியா வன்மையாகக் கண்டிக்கும் என ஜெய்சங்கர் தனது உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜெய்சங்கரின் இந்த ராஜதந்திர நகர்வு என்பது ஈரான் பக்கத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இதேபோன்ற கவலையை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் அவர் பகிர்ந்துள்ளார்.
கருங்கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் மீதும், வணிகக் கப்பல்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் உக்ரைனிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ‘எம்.வி ஓமர்பி’ (Omar B)என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், சர்வதேச விதிகளின்படி கடல் வழிப் போக்குவரத்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2,557 இந்தியர்களை ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வழியாக இந்திய அரசு பாதுகாப்பாக மீட்டுள்ளது.
தற்போது ஈரானில் சுமார் 7,000 இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.
பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை ஈரானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்களில் இந்தியர்களின் உயிரைப் பாதுகாப்பதே மத்திய அரசின் முதல் முன்னுரிமை என்பதை இந்த அதிரடி பேச்சுவார்த்தைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
