தமிழக அரசியல் களத்தில் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் ஹாட் ஸ்பாட்டாக இருந்த கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள், தற்போது சட்ட ரீதியான போராட்டமாக மாறியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்தத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய திமுக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் இவிஎம் எந்திரங்கள் சரிபார்ப்புப் பணியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது.
வாக்கு எந்திரங்கள் ஆய்வின் போது திமுக சார்பில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை என்றும், இதன் மூலம் 30 சதவீதத்திற்கும் மேலாக எந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 57-வது பூத் எண் கொண்ட இயந்திரத்தில் முறையான சீல்கள் இல்லை என்றும், எந்திரத்தில் ஒட்டப்பட்டிருந்த அட்ரஸ் டேக் புதியதாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது எந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கான சட்ட ரீதியான மற்றும் அறிவியல் பூர்வமான சான்று என அவர் வாதிடுகிறார்.
இந்தக் குளறுபடிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 19 கேள்விகள் அடங்கிய கடிதத்தை திமுக சமர்ப்பித்துள்ளது. மேலும், மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கோ அல்லது உச்சநீதிமன்றத்திற்கோ கொண்டு செல்ல திமுக திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக 57-வது பூத் இயந்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால், அதனைத் தனியாகச் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் நடைமுறையிலேயே தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக, இதனை ஒரு மிகப்பெரிய தேர்தல் முறைகேடாக முன்னிறுத்தத் தயாராகி வருகிறது.
மறுபுறம், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இந்தத் தேர்தல் எந்திரங்கள் சரிபார்ப்புப் பணி 100 சதவீதம் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவே இந்த ஆய்வு நடத்தப்படுவதாகவும், இதுவரை நடந்த சோதனைகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் உள்ள இயந்திரங்களை மட்டும் ஆய்வு செய்து, அதில் பதிவான வாக்குகளைப் பிரதிநிதிகளிடம் காண்பித்த பின் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக மற்றும் தேர்தல் ஆணையம் இடையே நிலவும் இந்த முரண்பட்ட கருத்துக்கள், கொளத்தூர் தொகுதி விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.
