போர் நிறுத்தத்தில் தொடரும் ‘கொடூரம்’! காசா மீது ‘இஸ்ரேல்’ குண்டுவீச்சு! கதறும் பாலஸ்தீனியர்கள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு இடையே, காசா பகுதியில் உள்ள அல்-முத்தாகின் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் இந்த மசூதியைத் தங்களது ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பல ஆயுதக் கிடங்குகளைத் தகர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்பாகவே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலால் மசூதி முற்றிலும் தரைமட்டமாகியுள்ள நிலையில், அங்குத் தங்கியிருந்த இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

காசாவின் மத விவகாரத்துறை அமைச்சகம் இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது போன்ற பொய்க் காரணங்களைக் கூறி இஸ்ரேல் புனிதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இது ஒரு மனிதாபிமானமற்ற போர் குற்றம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கச் சர்வதேச நாடுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இதுவரை சுமார் ஆயிரத்து 207 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மணிநேரமும் தாக்குதல்கள் தொடர்வதாகவும், மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் என்ற பெயரில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது தங்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் காசா மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் சுமார் 164 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்துள்ளன.

அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் புனிதத் தலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியிலும் மத்திய கிழக்கில் வன்முறைத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

Related News

Latest News