சென்னையில் இன்றும் மழையா? வானிலை மையம் அப்டேட்….

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.

இதன் தாக்கத்தால் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளிலும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29°C ஆக இருக்கும்.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45–65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related News

Latest News