சர்வதேச அரசியலில் தற்போது ஒரு சுவாரசியமான ‘ஈகோ’ யுத்தம் தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நேருக்கு நேர் சந்திக்க போவதற்கு முன்னதாகவே ஒரு போர் விமான விவகாரம் இருவருக்கும் இடையே அனலைக் கிளப்பியுள்ளது.
துருக்கி நாட்டிற்கு அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்களை விற்பனை செய்யத் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்குப் பகிரங்கமாக முட்டுக்கட்டைப் போட்டுள்ள நெதன்யாகு, “அமெரிக்காவை வெறுக்கும் ஒரு நாட்டிற்கு இத்தகைய ஆயுதங்களை வழங்கக் கூடாது” என்று எச்சரித்திருந்தார்.
தனது பாணியிலேயே இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ட்ரம்ப், “நான் எதை விற்க வேண்டும் என்று எனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை” என ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
“துருக்கி எனக்கு ஒரு மிகச்சிறந்த கூட்டாளி” என்று பாராட்டியுள்ள ட்ரம்ப், துருக்கியிடம் ஒரு பிரம்மாண்டமான ராணுவம் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதை நெதன்யாகுவின் முகத்திற்கு நேராகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
“பிபி-க்கு (நெதன்யாகு) வேண்டுமானால் துருக்கியைப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் என்னிடம் மிகவும் நெருக்கமாக உள்ளனர்” என்று ட்ரம்ப் கூறியிருப்பது, இஸ்ரேல் தரப்பைச் சற்றே அதிர வைத்துள்ளது.
இருப்பினும், இந்த டீலில் ஒரு சின்ன ட்விஸ்ட் உள்ளது. துருக்கி ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 (S-400) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வாங்கியுள்ளதால், அவர்களுக்கு எஃப்-35 விமானங்களை வழங்குவதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அந்த ரஷ்ய ஆயுதங்களை முழுமையாக அகற்றினால் மட்டுமே போர் விமானங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர். ஒருபுறம் அதிபர் ட்ரம்ப் துருக்கியைத் தனது பக்கம் இழுக்க நினைக்கிறார், மறுபுறம் நெதன்யாகு தனது பாதுகாப்பைக் கருதி அதனைத் தடுக்க நினைக்கிறார்.
நட்பு ஒரு பக்கம் இருந்தாலும், வர்த்தகம் மற்றும் அதிகாரப் போட்டியில் ட்ரம்ப் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த இரண்டு உலகத் தலைவர்களின் சந்திப்பில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
