தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வடகடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாளும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இதேபோன்ற வானிலை நீடிக்கும்.
ஜூலை 30ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மிதமான மழையும், மாநிலத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரும். ஆகஸ்ட் 2ஆம் தேதி வடகடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்று மற்றும் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
