தமிழ்நாடு முதல்வர் விஜய், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அங்குள்ள முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து முதல்வர் அலுவலகம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேரடி பேச்சுவார்த்தையால் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய அமைப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன.
குறிப்பாக, கர்நாடகாவின் நிலைப்பாடு மாறாவிட்டால் இந்த சந்திப்பு தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் அளிக்காது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையில், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவாக கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், முதல்வர் விஜயின் பயணம் தொடருமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
