தமிழகத்தில் திமுக ஆட்சிக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் குறித்து தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பதவியேற்பு விழாவிலேயே 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்காக “சிங்கப்பெண் அதிரடிப்படை” உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் மேலும் பல தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும் என நிதித்துறை அதிகாரிகள் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், தேர்தல் வாக்குறுதியின்படி வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டத்தை முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டம் வேலை தேடும் இளைஞர்களுக்கு பொருளாதார ஆதரவாக இருக்கும் என்றும், அவர்களை தவறான பாதையில் செல்லாமல் காக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிதிநிலையை காரணம் காட்டாமல், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
