தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஜூலை 27-ஆம் தேதி இதே நிலை நீடிக்கும் என்றும், ஜூலை 28 முதல் 30 வரை தமிழகம் முழுவதும், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 முதல் 29 வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், சில இடங்களில் இயல்பைவிட 2.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38–39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 28–29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மேலும், அந்தமான் கடல், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 26 முதல் 29 வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News