சென்னையில் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது.

இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இதேபோன்ற மழை தொடரும் என்றும், பிற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்பின்னர் ஜூலை 28 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 26 முதல் 29 வரை மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். மேலும், அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News