தமிழக தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்திற்கான ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய அலுவலகத்தை, பாரம்பரியமிக்க கோட்டை கட்டிடத்திலிருந்து அதற்கு அருகிலேயே அமைந்துள்ள 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
கோட்டை வளாகத்தின் முதல் தளத்தில் தற்போது இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகத்தில், இடநெருக்கடி காரணமாகப் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் எழுந்துள்ளதே இந்தத் திடீர் முடிவுக்கு முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது.
நாள்தோறும் முதலமைச்சரைப் பார்க்க வரும் வெளிநாட்டுத் தூதர்கள், பெரும் தொழிலதிபர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் இந்த இடநெருக்கடியால் இன்னல்களுக்கு ஆளாவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய, நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒட்டுமொத்த 10-வது தளத்தையும் முதலமைச்சரின் பிரத்யேக அலுவலகமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்தத் தளத்தில் உள்ள கருத்தரங்கக் கூடம் மற்றும் உணவருந்தும் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, ஒரு விசாலமான மற்றும் நவீன வசதிகள் கொண்ட அலுவலகத்தை அங்கு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியான காரணங்கள் ஒருபுறமிருக்க, இந்த இடமாற்றத்திற்குப் பின்னால் ஒரு ஜோதிடப் பின்னணி இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
வாஸ்து ரீதியாகத் தற்போதைய அறை முதலமைச்சருக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவில்லை என்றும், உயரமான இடத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வெற்றிகரமான அரசியல் பயணத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
குறிப்பாகக் கிழக்கு நோக்கி கடலைப் பார்த்தபடி முதலமைச்சரின் இருக்கை அமைய வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. கடல் காற்றும், உயரமான இடமும் நேர்மறை ஆற்றலைத் தரும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டம் குறித்த ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான கோட்டை அலுவலகத்தை விட்டுவிட்டு, நவீன வசதிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் விஜய் எப்போது குடியேறுவார் என்ற எதிர்பார்ப்பு கோட்டை வட்டாரத்தில் இப்போதே பற்றிக் கொண்டுள்ளது.
முதல்வரின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ அவரது நிர்வாகத்திற்கு எந்த அளவிற்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
