தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்த நிலையில், தற்போது வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து பல இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று சென்னை, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவான நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாளும் இதேபோன்ற வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 24-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதேநேரம், இன்று முதல் ஜூலை 24 வரை உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும், பிற பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36–37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 26–27 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
