ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…

தெற்கு ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், மொத்தம் ரூ.2,576 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தெற்கு ரெயில்வே விரைவில் தொடங்க உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் அதிக நெரிசல் காணப்படும் தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் ரூ.713 கோடி மதிப்பில் நான்காவது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புறநகர் மற்றும் விரைவு ரெயில்களின் போக்குவரத்து சீராக நடைபெறுவதுடன், நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரக்கோணம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் ரூ.929 கோடி மதிப்பில் இரட்டை ரெயில் பாதையும், ஈரோடு–கரூர் வழித்தடத்தில் ரூ.934 கோடி மதிப்பில் இரட்டை பாதையும் அமைக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மூன்று திட்டங்களும் நிறைவேறினால், தெற்கு ரெயில்வேயின் இயக்கத் திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயரும்.

தெற்கு ரெயில்வேயில் தினமும் சுமார் 1,400 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் 152.75 கோடி பயணிகள் சேவையை பயன்படுத்தியதன் மூலம் ரூ.8,215 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ரெயில் பாதைகள், ரெயில் நிலைய மேம்பாடு மற்றும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கத் திட்டங்கள் அனைத்தும் 2030-க்குள் நிறைவடைந்தால், தற்போது இயக்கப்படும் ரெயில்களை விட சுமார் 50 சதவீதம் அதிக ரெயில்களை இயக்கும் திறன் தெற்கு ரெயில்வேக்கு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News