கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த விபத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார்.
அவர் கூறுகையில், “கரூரில் எந்த கலவரமோ, பேரிடரோ நடைபெறவில்லை. மதியம் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் காலை முதலே வந்திருந்தனர். விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுமார் 9 மணிக்கே திரண்ட மக்கள், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். ஆனால், விஜய் மாலை 7.30 மணிக்குத்தான் வந்தார். தண்ணீர், உணவு இல்லாமல் பல மணி நேரம் வெயிலில் நின்றதால் ஏராளமானோர் மயக்கமடைந்தனர். இது தாமதத்தின் நேரடி விளைவாகும்” என்றார்.
மேலும், “சுமார் 100 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியை திமுக அரசே மேற்கொண்டது. சம்பவத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல், திமுக மீது குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விபத்துக்கு காரணம் தனது தாமதமான வருகை என்பதை விஜய் முதலில் உணர வேண்டும்” என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது.
