கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளிவாளை பரிசாக வழங்கி வரவேற்றார். பின்னர் மேடையில் பேசிய அவர், கடந்த ஆண்டு இதே கரூர் மண்ணுக்கு ஒரு கட்சித் தலைவராக வந்த விஜய், இன்று தமிழக முதலமைச்சராக மீண்டும் வந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டார். கரூர் மாவட்ட மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் அவருக்கு வரவேற்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியபோது, “விசில் அடிப்பவர்களை வைத்து கட்சி நடத்த முடியுமா?” என்று பலர் விமர்சித்ததாகவும், ஆனால் 1977-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததாகவும் கூறினார். திரையுலகில் இருந்து வந்தவரால் ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்விக்கும், தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்து எம்.ஜி.ஆர். வரலாறு படைத்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
அதேபோல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வீரமும் இணைந்த தலைவராக முதலமைச்சர் விஜய் உருவெடுத்துள்ளதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டினார். தமிழக மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் விஜயின் செயல்பாடுகளை உற்று நோக்கி வருவதாகவும், அவரைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், “விடியல் தருவோம் என்று கூறியவர்கள் மக்களுக்கு அல்ல, அவர்களுக்கே விடியல் பெற்றுக் கொண்டனர். இனி தமிழகத்தின் எதிர்காலம் விஜயின் கைகளில் உள்ளது. இது அவருடைய காலம். தமிழகத்தில் இனி நிரந்தரமாக விஜய்தான் ஆட்சியமைப்பார்” என்று அவர் பேசினார்.
