கரூர் செல்லும் முன் முதல்வர் விஜய்க்கு வந்த மகிழ்ச்சி செய்தி…

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அரசு பணிநியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. மேலும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக அரசு வேலை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், “உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வேலை வழங்குவதில் என்ன தவறு? பொருளாதார உதவி அவர்களுக்கு தேவையில்லையா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையில் இருப்பதையும், அந்த விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், கும்பகோணம் மகாமகம் விபத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றும் தருமபுரி பேருந்து எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், கருணை அடிப்படையிலான பணிநியமன விதிகளை பின்பற்றாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக அரசு வேலை வழங்குவது விதிமுறைகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டது.

விசாரணையின் போது அரசு மற்றும் மனுதாரர் தரப்புக்கு இடையே காரசார வாதங்கள் நடைபெற்றன. அப்போது நீதிபதிகள், “நீதிமன்றம் அரசியல் மேடை அல்ல” என்று மனுதாரர் தரப்பை எச்சரித்தனர். இறுதியில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவை தற்காலிகமாக தடுக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, அரசின் கொள்கை முடிவில் தலையிட மறுத்த நீதிமன்றம், பணிநியமன நடவடிக்கைகளை தொடர அனுமதி வழங்கியது.

Related News

Latest News