ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரேஷன் அரிசியில் உடைந்த அரிசி (குருணை) கலவையின் அளவை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக ‘ஆர்.எம்.டி.’ (RMD) என்ற புதிய திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில் 53.41 மில்லியன் டன் கோதுமை, 0.9 மில்லியன் டன் சிறுதானியங்கள் மற்றும் 42.84 மில்லியன் டன் நெல் உள்ளிட்ட மொத்தம் 68.34 மில்லியன் டன் அரிசி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
புதிய விதிமுறைகளின்படி, பச்சை அரிசியில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த 25 சதவீத உடைந்த அரிசி அளவு இனி 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதேபோல், புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக இருந்த குருணை அளவு 5 சதவீதமாக மட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு உயர்தரமான, முழு அரிசி அதிக அளவில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் முதலில் ஆந்திரப் பிரதேசத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அங்கு நெல் அரைக்கும் போது கிடைக்கும் உடைந்த அரிசியை ஆலைகளிடமே ஒப்படைக்கச் செய்து, அதற்குப் பதிலாக அரசு ஊக்கத்தொகை வழங்கியது. இந்த முயற்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதே நடைமுறை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மேம்பட்டு, பயனாளர்களுக்கு தரமான உணவுப் பொருள் கிடைக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
