தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 30-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
- காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள வீட்டிலிருந்து முதல்வர் விஜய் விமான நிலையத்திற்கு புறப்படுகிறார்.
- காலை 9.20 மணியளவில் மீனம்பாக்கத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செய்கிறார்.
- காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் சென்றடைவார்.
- காலை 10.40-க்கும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கரூரில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.
- நண்பகல் 12.15 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும். மேலும், இதை தொடர்ந்து அரசு இல்லத்தில் சிறிது நேரம் முதலமைச்சர் ஓய்வெடுத்து மதிய உணவை எடுத்துக்கொள்வார்.
- சுமார் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளார்.
- அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்டங்களை வழங்குவது தொடர்பான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் சாலை மார்க்கமாகவே கரூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை நோகி சுமார் 4.10 மணியளவில் புறப்படுவார்.
- மாலை 6 மணிக்கு தனிவிமான மூலம் சென்னைக்கு திரும்பும் பயணத்தை தொடங்குவார்.
- மாலை 7 மணிக்கு சென்னைக்கு திரும்பும் முதலமைச்சர் விஜய், 7.45 மணிக்கெல்லாம் மீண்டும் தனது நீலாங்கரை வீட்டை அடைந்து கரூர் பயணத்தை முடிவு செய்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கரூருக்கு விஜய் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சில கூட்டணிக் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதனால் கரூர் பயணம் நிர்வாக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றவுள்ள உரை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
