அடுத்தடுத்து பாய்ந்த ‘ஏவுகணை’! உக்ரைனுக்கு ரஷ்யா கொடுத்த ‘பேரிடி’!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரம் இப்போது மீண்டும் ஒரு கோரமான விடியலைச் சந்தித்துள்ளது. ரஷ்யா ஏவிய அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் கீவ் நகரின் குடியிருப்புப் பகுதிகளை நள்ளிரவில் நிலைகுலையச் செய்துள்ளன. வானைப் பிளக்கும் அபாயச் சங்குகள் முழங்க, மக்கள் தங்களின் உயிரைக் காத்துக்கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பாதாளப் பதுங்கு குழிகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தால் நகரின் பல இடங்களில் பயங்கர வெடிச்சத்தங்களுடன் தீப்பிழம்புகள் எழும்புவதைக் காட்டும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, கீவ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க போடில் (Podil) மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் ஏவுகணைத் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் ஏழு முதல் ஒன்பதாவது மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மக்கள் பலர் சிக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரோன்களின் சிதறிய பாகங்கள் நகரின் பல்வேறு இடங்களிலும் விழுந்து தீ விபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. நகரின் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கடந்த சில நாட்களில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் இது மிகவும் வலிமையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா தனது தாக்குதல்கள் ராணுவ இலக்குகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்று கூறி வந்தாலும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அப்பாவி மக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. வரும் நாட்களில் நடைபெறவுள்ள மிக முக்கியமான நேட்டோ (NATO) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ரஷ்யா இந்த அதிரடித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது சர்வதேச அரசியலில் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

தனக்குக் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க வேண்டும் என்று உக்ரைன் உலக நாடுகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் வேளையில், இந்தத் தாக்குதல் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் குறித்த இறுதித் தகவல்கள் வெளியாக இன்னும் சில காலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகத் தொடரும் இந்தப் போரில், சாமானிய மக்களின் பாதுகாப்பு என்பது மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது.

Related News

Latest News