சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சராசரி கடல் மட்டத்தில் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா–மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இன்று கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36–37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28–29 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.
மீனவர்களுக்காகவும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, ஜூலை 3 முதல் 6-ம் தேதி வரை குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
