தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 34,911 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் தற்போது 2.28 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ள நிலையில், சுமார் 7 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ரேஷன் கார்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான முக்கிய ஆவணமாக இருப்பதால், திருமணத்திற்குப் பிறகு புதிய குடும்பங்கள் முதன்மையாக விண்ணப்பித்து வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி-சேலை, சிறப்பு நிதியுதவிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் காரணமாக மார்ச் 31 வரை இந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.
மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 21 ஆயிரம் விண்ணப்பங்களைத் தவிர மற்றவை அனைத்தும் ஏற்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன. மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமைத் துறைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். ஆனால் அவை எப்போது வழங்கப்படும் என்பது அரசின் இறுதி முடிவைப் பொறுத்தது என்றனர். குறிப்பாக ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் விவகாரங்களில் கள ஆய்வு மற்றும் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுவதால் தாமதம் ஏற்படுவதாகவும் விளக்கமளித்தனர்.
புதிய ரேஷன் கார்டுகளை முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்குவாரா அல்லது வழக்கம்போல் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
