PF பணம் எடுப்பது இனி ஒரு கிளிக்கில்… UPI வசதி வருகிறது… எப்போது அமலுக்கு வரும்?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் தங்களின் PF (Provident Fund) தொகையை UPI பேமெண்ட் கேட்வே மூலம் எளிதாகப் பெறும் புதிய வசதியின் சோதனைப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த புதிய வசதி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “EPFO உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கில் இருந்து விதிமுறைகளின்படி பெறத் தகுதியான தொகையை UPI மூலம் நேரடியாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியின் சோதனை நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் தற்போது வாரக்கணக்கில் நடைபெறும் பணப் பரிவர்த்தனை, சில நொடிகளில் முடியும்” என்றார்.

EPFO 3.0 திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் UMANG செயலியில் உள்நுழைந்து தங்களது PF கணக்கில் இருந்து எவ்வளவு தொகையை எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் என்பதை முதலில் சரிபார்க்க முடியும். பின்னர் தேவையான தொகையை உறுதிப்படுத்தியவுடன், UPI மூலம் அந்தப் பணம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த புதிய அமைப்பு, மருத்துவச் செலவுகள், கல்வி, திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட EPFO விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காக மட்டுமே PF தொகையைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உறுப்பினர்களின் மொத்த PF இருப்பில் ஒரு பகுதி ஓய்வூதிய நோக்கத்திற்காக பாதுகாக்கப்படும். மீதமுள்ள தகுதியான தொகையில் மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்படும். எந்தக் காரணத்திற்காக எவ்வளவு தொகை பெறலாம் என்பதையும் செயலி தெளிவாகக் காட்டும்.

தற்போது PF தொகையைப் பெற பல்வேறு ஆவணங்கள், சரிபார்ப்புகள் மற்றும் சில சமயங்களில் நிறுவனத்தின் ஒப்புதல் போன்ற நடைமுறைகள் தேவைப்படுகின்றன. EPFO 3.0 மூலம் இந்தச் செயல்முறைகள் பெருமளவில் எளிமையாக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் விரைவாகவும் வெளிப்படையாகவும் PF தொகையைப் பெறும் வசதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News