தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் பாடத்தைக் கொடுத்துள்ள நிலையில், கட்சியை வேரோடு மாற்றியமைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.
சுமார் 75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு பேரியக்கம், தேர்தல் வெற்றியையும் தோல்வியையும் கடந்து மீண்டும் ஒரு வலிமையான எஃகுக் கோட்டையாக நிமிர வேண்டும் என்பதில் ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். இதற்காக, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்பட்ட 19 ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகளைத் தீவிரமாகப் பரிசீலித்த அவர், தற்போது திமுகவின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மறுசீரமைக்க ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஸ்டாலின் கையாண்ட விதம் அரசியல் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆய்வுக் குழுக்கள் வழங்கிய ரகசியத் தகவல்கள் ஒருபுறம் இருக்க, “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளம் வாயிலாக சுமார் 6 லட்சம் கட்சித் தொண்டர்களின் நேரடிக் கருத்துக்களையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த லட்சக்கணக்கான ஆலோசனைகளை மனிதத் தலையீடின்றி ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கட்சியில் புத்துணர்ச்சி ஊட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளார். கட்சியின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பரிந்துரைக்க தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட ஒரு வலிமையான குழுவை அவர் தற்போது நியமித்துள்ளார்.
இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாவட்ட வாரியான எல்லைகளை மறுவரையறை செய்வது, திமுகவின் பல்வேறு சார்பு அணிகளைச் சீரமைப்பது மற்றும் தேர்தல் பணிகளுக்கென்று ஒரு நிரந்தரமான அமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் இந்தக் குழு கவனம் செலுத்தும்.
அதுமட்டுமல்லாமல், தலைமைக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க “திங்க் டேங்க்” (Think Tank) எனப்படும் ஒரு அறிவுசார் அமைப்பை உருவாக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழு தனது விரிவான பரிந்துரைகளை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவினருடன் விவாதிக்கப்பட்டு, திமுகவின் அடுத்தகட்டப் பயணம் தீர்மானிக்கப்பட உள்ளது.
அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் திமுகவை வழிநடத்தும் வகையிலான ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் லட்சியமாக உள்ளது. தேர்தல் தோல்வியால் சோர்ந்து விடாமல், குறைகளைக் களைந்து புதிய வடிவில் மக்களிடம் செல்வதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று அவர் தனது அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஒரு பக்கம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுக தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள எடுக்கும் இந்த முயற்சி, தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் வெளியாகப்போகும் அந்தப் பரிந்துரைகள், அறிவாலயத்தில் யாருடைய பதவியைப் பறிக்கும், யாருக்குப் புதிய பொறுப்புகளைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
