இரு விஜயபாஸ்கர்கள் த.வெ.க.வில் இணைப்பு… அரசியல் களத்தில் புதிய பரபரப்பு…

அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விராலிமலை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் தொகுதியின் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளனர்.

இந்த மாபெரும் இணைப்பு விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை காலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக புதுக்கோட்டையில் இருந்து 200 பேருந்துகள் மற்றும் 500 கார்கள் மூலம் தொண்டர்கள் மாமல்லபுரம் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைய உள்ளார்.

மேலும், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் 3 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 8 மாவட்டச் செயலாளர்கள், 250 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பல முன்னாள் வேட்பாளர்களும் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

Latest News