விஜய் சேதுபதியின் அடுத்த படம்… கிருத்திகா உதயநிதியுடன் கூட்டணி…

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து பிஸியாக உள்ளார். தற்போது, இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான ‘டெலுலு’ புகழ் ரியா ஷிபு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரகசியமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் நீடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உறவுகள், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையை கிருத்திகா உதயநிதி தனது தனித்துவமான பாணியில் இயக்கி வருகிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் ஒரு வார படப்பிடிப்பை முடித்தவுடன், விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படத்தில் இணையவுள்ளார். இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 7-ஆம் தேதி தொடங்க உள்ளது.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இதன் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருத்திகா உதயநிதி மற்றும் மணிரத்னம் இயக்கும் அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News