சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மிகக் கடுமையான சொற்களால் சாடியிருப்பதுதான் இப்போது உலக நாடுகளின் ஹாட் டாபிக். ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் லெபனான் மீது அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியதுதான் டிரம்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணம்.
“நெதன்யாகுவிற்குச் சிறிதும் நிதானம் இல்லை” என்று டிரம்ப் மிகக் காட்டமாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய இந்தத் துல்லியத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
இது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் என்று இஸ்ரேல் கூறினாலும், மிக முக்கியமான ஒரு ஒப்பந்தத்திற்கு முன்பாக இந்தத் தாக்குதல் நடந்தது டிரம்பை நிலைகுலையச் செய்துள்ளது. ஆக்ஸியோஸ் (Axios) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. பிபி ஏன் இதைச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை, அவர் மீது எனக்கு மிகுந்த கோபம் உள்ளது” என டிரம்ப் வெடித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் காரணமாக ஈரானுடனான ஒப்பந்தம் கையெழுத்தாவது சில மணி நேரங்கள் தள்ளிப்போயுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்து, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து கச்சா எண்ணெய் விநியோகத்தைச் சீராக்க டிரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இதற்குப் பழிவாங்கும் என்று எச்சரித்துள்ளது. “இந்தக் குற்றங்கள் பதிலடி இல்லாமல் போகாது” என்று ஈரானிய கமாண்டர்கள் அறிவித்துள்ளது ஒப்பந்தத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒருபுறம் டிரம்ப் “ஒப்பந்தம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது” என்று கூறினாலும், ஈரானின் மூத்த பேச்சுவார்த்தையாளர் காலீபாஃப், “வாக்குறுதிகளை நிறைவேற்றத் திறமையற்றவர்களுடன் பேசுவதில் பலனில்லை” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் உலக சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. தனது ராஜதந்திர நகர்வுகளுக்கு இஸ்ரேலே முட்டுக்கட்டை போடுவதாகக் கருதும் டிரம்ப், இந்த விவகாரத்தை எப்படிக் கையாளப் போகிறார் என்பதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

