ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சென்ட்காம் படைகள் நடத்திய இந்தத் தாக்குதலில் ‘AT Settebello’ என்ற எண்ணெய் கப்பல் இலக்கு வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகளை மீறி கச்சா எண்ணெயைக் கடத்திச் சென்ற ‘நிழல் கப்பல்’ (Shadow Fleet) என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சுமார் 60 முறை வாய்மொழி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், 8 முறை வான்வழிப் போர் ஒத்திகைகள் மூலம் எச்சரித்தும் அந்தக் கப்பல் நிற்காததால், இறுதியாக அதன் எஞ்சின் அறையைத் தகர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அமெரிக்கா தனது தற்காப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. எஞ்சின் அறையிலிருந்து வெளியேற மாலுமிகளுக்கு 15 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட பின்னரே துல்லியமான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் முதன்மைப் பொறியாளர் சுரேஷ் பட்னாலா , டெக் கேடட் ஆதித்யா சர்மா மற்றும் என்ஜின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா ஆகிய மூன்று இந்தியர்கள் பலியானது இந்திய அரசுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் நேரடியாகப் பேசித் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
வணிகக் கப்பல்கள் மீது இது போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும், இது தேவையற்றது என்றும் இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, அப்பாவி மாலுமிகள் புவிசார் அரசியல் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே, கப்பலை நிர்வகிக்கும் துபாயைச் சேர்ந்த ஐ.ஓ.எஸ் மெரைன் நிறுவனம் அமெரிக்காவின் வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது. தாக்குதலுக்கு முன்பாக சுமார் 10 நாட்களாகக் கப்பல் ஒரே இடத்தில்தான் நின்றிருந்தது என்றும், எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 35 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்துச் சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், இந்திய மாலுமிகள் சங்கம், வணிகக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளின் தேசியம் குறித்து அமெரிக்காவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றும், கப்பலைச் சிறைபிடிப்பதற்குப் பதிலாக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது மனிதநேயமற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவில் ஒரு தற்காலிக விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை வலுத்து வருகிறது.
