ஈரான் தேசத்தை சுமார் 37 ஆண்டுகாலமாகத் தனது அதிகாரப் பிடிக்குள் வைத்திருந்த உச்ச தலைவர் அலி கமேனி மறைந்து நூறு நாட்களைக் கடந்தும், அவரது இறுதிச்சடங்கு இன்னும் நடைபெறாதது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கிய முதல் நாளிலேயே, டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டார்.
அப்போது முதல் தற்போது வரை பலமுறை அவரது இறுதிச்சடங்கு தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின் பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய கால அட்டவணையை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
டெஹ்ரான் மேயர் அலிரேசா ஜக்கானி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அலி காமேனியின் இறுதிச்சடங்கு வரும் ஜூன் 26 முதல் ஜூலை 5-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தொடக்கப் பத்து நாட்கள், ஷியா முஸ்லிம்களால் இமாம் ஹுசைனின் நினைவாகத் துக்க நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த மத ரீதியான சடங்குகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே, உச்ச தலைவரின் இறுதிச்சடங்கை நடத்த ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டிய இந்த நிகழ்வு, போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் தள்ளிப்போனது. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆட்சி மாற்றச் சூழலில், இது மேலும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வு வெறும் டெஹ்ரானுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. ஈரானின் புனித நகரங்களான கோம் மற்றும் மஷாத் ஆகிய இடங்களிலும் பிரம்மாண்டமான அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, மஷாத் நகரம் ஷியா முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுவதால், அங்கேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
டெஹ்ரானில் மட்டும் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாகச் சடங்குகள் நடைபெறும் என்றும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 கோடி மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் என்றும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இது ஈரானின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் கூட்டமாக இருக்கும் என்பதால், அதற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
அலி காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதன் பின்னணியில் மதக் காரணங்கள் மட்டுமே இல்லை; அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள அமைதி உடன்படிக்கை போன்ற அரசியல் காரணங்களும் இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் அரசியல் தலைமை ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்த இறுதிச்சடங்கு என்பது அந்த நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக மாற்றப்பட உள்ளது. அதேநேரம், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவது குறித்த டிரம்பின் அறிவிப்பும், ஈரானின் தற்போதைய சூழலும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
