உலக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய ‘பகீர்’ திருப்பம் அரங்கேறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் ஒரு “மாபெரும் சமாதான ஒப்பந்தம்” எட்டப்பட்டுவிட்டதாக அறிவித்தது, அவரது மிக நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையே நிலைகுலையச் செய்திருக்கிறது. ஆமாம், இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலிடம் ஒரு வார்த்தை கூட அமெரிக்கா முன்கூட்டியே சொல்லவில்லை என்பதுதான் இப்போது வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்.
‘ஏக்ஸியோஸ்’ (Axios) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தான் ரத்து செய்துவிட்டதாகவும், விரைவில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் ட்ரம்ப் அறிவித்தபோது, அதைக் கேட்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறைந்து போயிருக்கிறார். ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை “ஈரானை மிகக் கடுமையாகத் தாக்குவோம்” என்று கர்ஜித்த ட்ரம்ப், திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது இஸ்ரேல் தரப்பைச் சுத்தமாகத் திகைக்க வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் ஈரானுடன் ஒரு சிறந்த தீர்வை எட்டிவிட்டோம்” என்று வெள்ளை மாளிகையில் பெருமிதத்துடன் கூறினார். ஆனால், இதைப் பார்த்து மிரண்டு போனது இஸ்ரேல் மட்டுமல்ல, ஈரானும் தான். ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அடியோடு மறுத்துள்ளது. “இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இதெல்லாம் வெறும் யூகங்கள் தான்” என்று ஈரான் கூறி வருவது, இந்தச் சமாதான முயற்சியில் இன்னும் ஏதோ ஒரு மர்மம் நீடிப்பதை உறுதி செய்கிறது.
கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் எகிறியது. இந்தச் சூழலில் தான் ட்ரம்ப் இந்த அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் ட்ரம்பிடம் பேசிய நெதன்யாகு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும், ஏவுகணைத் தயாரிப்பு முடக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை ட்ரம்ப் உறுதி செய்த பிறகே, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஒப்புதல் இல்லாமலேயே அமெரிக்கா தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துமா? அல்லது இது ஈரானை வீழ்த்துவதற்கான ட்ரம்ப்பின் ராஜதந்திரமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
