இனி ஈஸியா ‘லோன்’ கிடைக்காது? அடியோடு மாறப்போகும் வங்கி விதிகள்!

சொந்த வீடு, புதிய கார் அல்லது உயர்கல்வி என ஒரு சராசரி இந்தியரின் கனவுகளை நனவாக்குவதில் வங்கிக் கடன்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், வரும் 2027-ஆம் ஆண்டு முதல் இந்தக் கனவுகளை எட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. உங்கள் சிபில் ஸ்கோர் 730-க்கும் குறைவாக இருந்தால், வங்கிக் கடன் பெறுவது ஒரு மிகப்பெரிய சவாலாக மாறப்போகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள ‘எக்ஸ்பெக்டட் கிரெடிட் லாஸ்’ (Expected Credit Loss) எனப்படும் புதிய கடன் விதிமுறைதான் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமையப் போகிறது. தற்போதுள்ள நடைமுறைக்கும், 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரப்போகும் இந்த புதிய விதிமுறைக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

தற்போதைய சூழலில், ஒருவர் கடனைத் திருப்பிக் கட்டத் தவறி அது வாராக்கடனாக மாறிய பிறகே வங்கிகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஆனால், புதிய விதிகளின்படி, ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போதே அவர் கடனைத் திருப்பிச் செலுத்துவாரா என்பதை வங்கிகள் முன்கூட்டியே கணிக்க வேண்டும்.

அந்த நபர் கடனைச் சரியாகச் செலுத்தத் தவறினால் ஏற்படக்கூடிய இழப்பைச் சமாளிக்க, வங்கிகள் தங்களின் லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பாதுகாப்பாக முன்கூட்டியே ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த நடைமுறை வங்கித் துறையைப் பலப்படுத்தும் என்றாலும், சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடன் விண்ணப்பிப்பவர்களில் சுமார் 62 சதவீதம் பேரின் சிபில் ஸ்கோர் 730-க்கும் குறைவாகவே உள்ளது. இனிவரும் காலங்களில் இவர்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டலாம் அல்லது மிகக் கடுமையான நிபந்தனைகளை விதிக்கலாம். அதேநேரம், 730-க்கும் அதிகமான ஸ்கோர் வைத்துள்ள சுமார் 7 கோடி இந்தியர்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்கும்.

உதாரணமாக, 25 லட்ச ரூபாய் வீட்டுக் கடனில் ஒரு தவணையை ஒரு மாதம் தாமதப்படுத்தினால் கூட, வங்கிகள் அதற்காகச் சேமித்து வைக்க வேண்டிய நிதி இரு மடங்கு அதிகரிக்கும். இதனால், வங்கி தனது லாபத்தைப் பாதுகாக்க அதிக வட்டி விகிதத்தை வசூலிக்க நேரிடும்.

இந்த மாற்றங்கள் 2027-ல் நடைமுறைக்கு வரும் என்பதால், இப்போதிருந்தே உங்கள் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்துவது அவசியம். இனி வங்கிகள் உங்கள் சிபில் ஸ்கோரை மட்டும் பார்க்காது; உங்கள் வருமானத் தரம், வேலைவாய்ப்புச் சூழல் மற்றும் ஒட்டுமொத்த கடன் சுமை என அனைத்தையும் மிக ஆழமாக ஆராயும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் சரியாகச் செலுத்துவது மற்றும் தேவையற்ற கடன் சுமைகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளலாம். உங்களின் இன்றைய நிதி ஒழுக்கம் தான், எதிர்காலத்தில் உங்கள் கனவு இல்லத்தையும் காரையும் வாங்குவதற்கான பாதையைச் சுலபமாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related News

Latest News