பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட கதாநாயகிகளுள் ஒருவரான சுகன்யா, புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான இவர்
விஜயகாந்துடன் சின்ன கவுண்டர், கமல்ஹாசனுடன் மகாநதி, இந்தியன், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமன்றி ஆனந்தம், அபூர்வ ராகங்கள், சிவகாமி, இவை அல்லாமல் தனியாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தற்போது வரை வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
டாப் நடிகைகளுள் ஒருவராக இருந்த சுகன்யா குறித்து 30 வருடங்களுக்கு முன்பு வீரப்பன் ஒரு பேட்டியில் கூறியிருந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்த வழக்கில் அவருக்கு சார்பாக தீர்ப்பு வந்துள்ளது.1996ஆம் ஆண்டில், மூத்த பத்திரிகையாளரார் ஒருவர் , வீரப்பனை பேட்டியெடுத்தார். அந்த பேட்டியில் வீரப்பன், முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனுக்கும் சுகன்யாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறியிருந்தது பகீர் கிளப்பியது. இந்த பேட்டியானது, பிரபல தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பானது.
வீரப்பனின் இந்த பேட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யா, இந்த பேட்டியால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும், சினிமா வாய்ப்புகள் பாதிப்படைந்ததாகவும் கூறி, தனக்கு பத்து லட்சம் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது, 30 வருடங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதில், சுகன்யாவிற்கு அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி தரப்பிலிருந்து 10 லட்சத்து 500 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த நேர்காணலின் அவதூறான பகுதிகளை மீண்டும் ஒளிபரப்பக்கூடாது என்ற நிரந்தர தடை உத்தரவும் தொடரும் என்றும் தீர்ப்பளித்தது.
