நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலை இன்று முதல் திடீரென ரூ.29 உயர்த்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.60 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இந்த புதிய விலையேற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் தலைநகரான புது டெல்லியில் நேற்று வரை ரூ.913 ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை, இன்று முதல் ரூ.942 ஆக மாறியுள்ளது.
அதேபோல், மற்றொரு முக்கிய வணிக நகரான மும்பையில் சிலிண்டரின் விலை ரூ.29 உயர்ந்து இன்று ரூ.941.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.957.50 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.928.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது
தொழில் நகரான கோயம்புத்தூரில் இன்றைய புதிய சிலிண்டர் விலை ரூ.29 உயர்ந்து தற்போது ரூ.971 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய மையமான மதுரையில் வீட்டு உபயோக LPG சிலிண்டரின் விலை இன்று ரூ.968.50 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மத்திய மாவட்டமான திருச்சியில் இன்றைய புதிய எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.964 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டமான சேலத்தில் ஒரு சிலிண்டரின் விலை இன்று உயர்ந்து ரூ.973.50 ஆக விற்பனையாகி வருகிறது. தென் மாவட்டமான திருநெல்வேலியில் ரூ.979-க்கும், கடலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.978-க்கும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை எண்ணூர் முனையத்தில் இருந்து போக்குவரத்துத் தொலைவு மிக அதிகமாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் விலை அதிகபட்சமாக ரூ.1000-க்கு நெருங்கி ரூ.985.50 ஆக உள்ளது.
