ரேஷன் கடை சேவைகள் இனி டிஜிட்டல் முறையில்… முழு விவரம் இதோ

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலமே பெறுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அதேசமயம் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் ரேஷன் அட்டையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் “Sarthak-PDS” என்ற திட்டத்திற்கு ரூ.25,530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளும் ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரேஷன் பொருட்கள் கடத்தல், முறைகேடுகள் ஆகியவற்றை தடுப்பதும், உண்மையான பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் உதவிகள் சென்றடைவதையும் உறுதி செய்வதாகும். மேலும் நிர்வாகச் செலவுகளை குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் இதன் இலக்காகும்.

இந்த திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. “Nirmal”, “ASHA”, “SAKSHAM” என்ற மூன்று முக்கிய AI கருவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. “Nirmal” கருவி பயனாளிகள் குறித்த நேரடி தரவுத்தளத்தை உருவாக்கி தகுதி கண்காணிப்பை மேற்கொள்ளும். “ASHA” கருவி சாட்பாட், வாட்ஸ்அப் மற்றும் IVR வழியாக மக்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும். “SAKSHAM” கருவி பொருட்களின் போக்குவரத்து மற்றும் விநியோகத்தை கண்காணித்து கடத்தலை தடுக்கும்.

இந்த புதிய டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் இந்தியாவின் ரேஷன் விநியோக அமைப்பு அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News