மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் தாக்கம் இந்திய எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 15-ம் தேதி இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆட்டோ மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலையும் அடிக்கடி உயர்ந்து வருகிறது.
டெல்லியில் கடந்த 15-ம் தேதி சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. பின்னர் 22-ம் தேதி ரூ.1 மற்றும் 24-ம் தேதி மேலும் ரூ.1 உயர்த்தப்பட்டது. நேற்று மீண்டும் கிலோவுக்கு ரூ.2 உயர்வு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சிஎன்ஜி விலை மேலும் ரூ.3.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றத்தின் படி, சென்னையில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். இதனால், இந்த குறுகிய காலத்தில் சிஎன்ஜி விலை மொத்தமாக ரூ.10-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
