பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வருமா? அப்போ விலை குறையுமா?

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுகளை கடுமையாக பாதித்து வருகின்றன. சில நாட்களுக்குள் பலமுறை விலை உயர்த்தப்படுவதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதன் பின்னணியில், பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி (GST) வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது எரிபொருள்களுக்கு மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு வரி (VAT)யும் விதித்து வருகின்றன. இதனால், அசல் விலையை விட நுகர்வோர் செலுத்தும் தொகை அதிகமாகிறது. உதாரணமாக, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.66.29 மட்டுமே. ஆனால், கலால் வரி, VAT மற்றும் டீலர் கமிஷன் சேர்த்து அதன் விலை ரூ.99.51 ஆக உயர்கிறது. இதில் சுமார் ரூ.28 வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்த வரிமுறைக்கு பதிலாக பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.78 அளவுக்கு குறையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மாதாந்திர செலவில் நிவாரணம் கிடைக்கும்.

மேலும், எரிபொருள் விலை குறைந்தால் போக்குவரத்து செலவுகளும் குறையும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்து, பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. இருப்பினும், மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

Related News

Latest News