வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி விட்டு, தற்காலிக சூழ்நிலை காரணமாக இஎம்ஐ (EMI) கட்ட முடியாமல் தவிப்பவர்களைக் கடன் வசூல் முகவர்கள் போன் மூலமாகவும், நேரில் வந்தும் மிரட்டி அநாகரிகமாக நடத்துவது அண்மைக்காலமாகப் பெரும் புகாராக வெடித்து வந்தது. இதற்கு மிக கடுமையான முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடன் வாங்கிய நுகர்வோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், வசூல் ஏஜெண்டுகளின் அத்துமீறல்களை அடியோடு ஒடுக்கவும் இந்த புதிய விதிகள் அக்டோபர் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. இனிமேல் எந்தவொரு வங்கியோ அல்லது ஏஜெண்டோ வாடிக்கையாளர்களைத் தங்களின் இஷ்டத்திற்கு மிரட்ட முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்களை இஎம்ஐ முறையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் ஏதேனும் ஒரு தவணைத் தொகையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உடனடியாக அந்த மொபைல் போன்களை முற்றிலும் செயலிழக்கச் செய்து (Block) விடுகின்றன. இனிமேல் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மொபைல் போனுக்கான கடன் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே அதன் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
அதற்கும் முன்னதாக 60 நாட்கள் கடந்த பிறகு 21 நாட்கள் கால அவகாசம் கொண்ட நோட்டீஸும், அதைத் தொடர்ந்து கூடுதலாக 7 நாட்கள் இறுதி அவகாசமும் வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக, போன் முடக்கப்பட்டாலும் இண்டர்நெட், இன்மிங் கால்கள், அவசரக்கால எஸ்ஓஎஸ் (SOS) மற்றும் அரசு அறிவிப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை முடக்கவே கூடாது. விதிகளை மீறி தவறான முறையில் மொபைல் போன் முடக்கப்பட்டாலோ அல்லது பணத்தைச் செலுத்திய 1 மணி நேரத்திற்குள் அன்லாக் செய்யத் தவறினாலோ, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வீதம் வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கும், நேரில் சந்திப்பதற்கும் இனி கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் பொருந்தும். காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 7 மணிக்கு பின்பாகவோ வாடிக்கையாளர்களுக்கு போன் செய்யவோ, அவர்களின் வீட்டிற்குச் செல்லவோ கூடாது. மேலும், முகவர்கள் கட்டாயம் தங்களின் அடையாள அட்டை மற்றும் வங்கியின் அங்கீகாரக் கடிதத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் வீட்டில் ஏதேனும் துக்க நிகழ்வுகளோ அல்லது திருமண சுபகாரியங்களோ நடக்கும் சமயங்களில், கடன் வசூல் தொடர்பாக அவர்களைத் தொந்தரவு செய்யவே கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையிலான விதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியான தொகையை வசூலித்துத் தரும் முகவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை (Incentives) வழங்கும் முறையையும் வங்கிகள் தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள், அவர்களின் ஜாமீன்தாரர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை முகவர்கள் போனில் மிரட்டுவது, அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் அவர்களின் ஆடியோ, வீடியோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து மானபங்கப்படுத்துவது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற செயல்கள் அனைத்தும் இனி “கடுமையான அத்துமீறல்கள்” என்ற குற்றச்சாட்டின்கீழ் கொண்டுவரப்படும்.
வங்கி ஊழியர்களோ அல்லது வசூல் முகவர்களோ இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அந்த முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட வங்கியே ஏற்க வேண்டும். இனிமேல் கடன் வசூல் முகவர்கள் அனைவரும் கட்டாயம் ‘இந்திய வங்கியியல் மற்றும் நிதி நிறுவனம்’ (IIBF) வழங்கும் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, முகவர்கள் பேசும் அனைத்து போன் அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வங்கிகள் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒரு வாடிக்கையாளரின் புகார் வங்கியின் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்கை வசூல் முகவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் விதிகள் இறுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அதிரடி விதிகள், கடன் வாங்கிய நடுத்தர நுகர்வோருக்குப் மாபெரும் நிம்மதியை அளித்துள்ளன.
