ஒரே ஒரு கிளிக்.. மொத்த பேங்க் பேலன்ஸும் காலி! புதிய வகை மோசடி!

இன்றைய காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நம்முடைய அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்தையும் மொபைலில் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்து பழகிவிட்டோம்.

இப்படி இருக்கும் பட்சத்தில், உங்கள் மொபைல் போனுக்கு “உங்களது பார்சல் டெலிவரி செய்யப்பட வேண்டிய முகவரி தவறாக உள்ளது” என்றோ அல்லது “சிறிய அளவிலான ஷிப்பிங் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே உங்கள் பார்சல் அனுப்பி வைக்கப்படும்” என்றோ ஏதேனும் ஒரு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால், அதனைச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடாதீர்கள்.

ஏனெனில், இதுதான் இன்றைய டிஜிட்டல் உலகின் மிக ஆபத்தான ‘டெலிவரி ஸ்கேம்’. நாம் எப்போதுமே ஏதோ ஒரு பார்சலை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்பதால், இத்தகைய செய்திகளைப் பார்த்தவுடன் எவ்விதத் தயக்கமும் இன்றி அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்குகளை கிளிக் செய்து விடுகிறோம். அதுதான் நாம் செய்யும் முதல் தவறு.

இந்தத் திருடர்கள் கையாளும் மிக முக்கியமான ஆயுதம் ‘அவசரம்’. “உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உங்கள் பார்சல் திருப்பி அனுப்பப்படும்” என அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை, நம்மைப் பதற்றமடையச் செய்து யோசிக்க விடாமல் முடிவெடுக்கத் தூண்டுகிறது.

அந்த லிங்க்கை கிளிக் செய்தவுடன் அது அச்சு அசல் அமேசான் அல்லது ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே தோன்றும் ஒரு போலிப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு உங்கள் வங்கியின் ரகசிய எண்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட்ட அடுத்த நொடியே, உங்களது வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் அவர்கள் திருடி விடுகிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் திரைகள் சிறியதாக இருப்பதால், அந்தப் போலி இணையதளங்களின் முகவரியையோ அல்லது அதில் உள்ள எழுத்துப் பிழைகளையோ நம்மால் சட்டென்று கண்டுபிடிக்க முடிவதில்லை. மேலும், ஏற்கனவே கசிந்துள்ள நமது பெயர் மற்றும் போன் நம்பர் போன்ற தகவல்களை அவர்கள் பயன்படுத்துவதால், அந்த மெசேஜ்கள் மிகவும் நம்பகமானதாகத் தோன்றுகிறது.

தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இந்தச் சூழலில், விழிப்புணர்வு ஒன்றுதான் நமது பணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி. தெரியாத எண்களில் இருந்து வரும் டெலிவரி லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள்; ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைத் திறந்து அதில் உங்கள் ஆர்டர் நிலையைச் சரிபார்க்கவும். சௌகரியத்தை விட பாதுகாப்பு தான் எப்போதுமே முக்கியம்.

Related News

Latest News