மகளிருக்கு ₹2,500 டூ விடியல் பயணம் வரை… வெளியான அப்டேட்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளான “மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை” மற்றும் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கும் “விடியல் பயணம் திட்டம்” ஆகியவை எப்போது அமலுக்கு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தவெகவின் மூத்த நிர்வாகியும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாகக் கோவையில் உள்ள தனது உறவினர் மருத்துவமனையில் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை புறப்படும் முன்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தனது உடல்நிலை தற்போது மிகவும் சீராகவும், நன்றாகவுமிருப்பதாகத் தெரிவித்த அவர், கடந்த எட்டு மாதங்களாகத் தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளின் கடுமையான உழைப்பு காரணமாகவே இந்த பரிசோதனை தள்ளிப்போனதாகக் குறிப்பிட்டார். மேலும், கோவையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் குறித்து ஐஜி தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும், சட்டத்துறையும் முதலமைச்சரும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளான மகளிருக்கு 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் விடியல் பயணம் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எத்தனை ஆண்டுகள் கழித்து, எப்படி வழங்கப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும் என்று சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதைய அரசின் நிதி நிலைக்கு ஏற்ப, ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், இது ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் விஜய் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், எந்தெந்த காலகட்டங்களில், எந்தெந்த திட்டங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சரே தக்க நேரத்தில் முடிவு செய்வார் என்பதால், இந்த கேள்வியை என்னிடத்தில் கேட்பது சரியாக இருக்காது என்றும் நாசூக்காகப் பதிலளித்தார். தமிழகத்தில் தவெக கூட்டணி அரசு அமைந்து முதலமைச்சராக விஜய் அரியணை ஏறியுள்ள நிலையில், பெண்களுக்கான இந்த பிரதான திட்டங்கள் நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மிக விரைவில் அமலுக்கு வரும் என்றே அமைச்சரின் இந்த பதில் உணர்த்துகிறது.

Related News

Latest News