மீண்டும் பரவும் கொடிய ‘எபோலா’ வைரஸ்! உலக சுகாதார அமைப்பு கொடுத்த ‘வெரி ஹை’ அலர்ட்!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (DRC) எபோலா வைரஸ் பாதிப்பு மீண்டும் மிகத் தீவிரமாக பரவி வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ்(Tedros Adhanom Ghebreyesus) வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, காங்கோவில் இதுவரை 900-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதில் 101 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எபோலா பாதிப்பானது ‘பூண்டிபுகியோ’ (Bundibugyo) என்ற குறிப்பிட்ட வைரஸ் வகையினால் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடந்த மே 16ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு சர்வதேச அவசரநிலையாக (Public Health Emergency of International Concern) அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் பரவலின் மையப்பகுதியாகக் காங்கோவின் ‘இடூரி’ (Ituri) மாகாணம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 50 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அங்கு நிலவி வரும் தொடர் உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள மக்களில் 4 பேரில் ஒருவருக்கு அவசரக் கால மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.

வன்முறைக்கு அஞ்சி பொதுமக்களும், சுகாதாரப் பணியாளர்களும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வருவதால், எபோலா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் (Contact Tracing) பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த அச்சமும், பாதுகாப்பற்ற சூழலும் உள்ளூர் மக்களிடையே உலக சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கைக் குறைவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழுவினர், மிக அபாயகரமான மற்றும் எளிதில் செல்ல முடியாத போர்ப் பகுதிகளுக்கும் நேரில் சென்று தங்களின் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனர். எபோலா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமின்றி, அங்குள்ள மக்களுக்குத் தேவையான ஒட்டுமொத்த பொது சுகாதாரச் சேவைகளையும் வழங்குவது மக்களின் நம்பிக்கையைப் பெற மிகவும் அவசியம் என டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காங்கோ நாட்டின் தேசிய அளவிலான எபோலா அச்சுறுத்தல் அபாயத்தை ‘மிகவும் அதிகம்’ (Very High) என்ற நிலைக்கு உலக சுகாதார அமைப்பு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் பிராந்திய அளவில் ‘அதிகம்’ என்றும், உலகளாவிய அளவில் இது ‘குறைவு’ என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக எபோலா என்பது மனிதர்களையும், குரங்கு போன்ற விலங்குகளையும் தாக்கக்கூடிய மிகக் கொடிய, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். காடுகளில் வாழும் வவ்வால்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ், பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களின் இரத்தம், எச்சில் மற்றும் உடல் திரவங்கள் மூலமாக மற்ற மனிதர்களுக்கும் வேகமாகப் பரவுகிறது.

முந்தைய எபோலா பாதிப்புகளில் இதனுடைய சராசரி மரண விகிதம் 50 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2014-2016 ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவல்தான் வரலாற்றிலேயே மிகப்பாரிய பாதிப்பாகக் கருதப்படும் நிலையில், தற்போது காங்கோவில் ஏற்பட்டுள்ள புதிய பரவல் உலக நாடுகளின் சுகாதார அமைப்புகளை மீண்டும் உஷாரடையச் செய்துள்ளது.

Related News

Latest News