வீட்டு கடன் மற்றும் வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. ஈரான் போர் காரணமாக உலகமே ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அதன் நேரடிப் பாதிப்பு இப்போது உங்கள் மாதத் தவணைகளில் அதாவது EMI-ல் எதிரொலிக்கப் போகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், அமெரிக்க டாலர் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்து வருகிறது. இதன் விளைவாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, விரைவில் நூறு ரூபாயைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சரிவைத் தடுக்கவும், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைவில் இருந்து பாதுகாக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி இப்போது ஒரு கடினமான முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடவுள்ளார். இந்தச் சந்திப்பில், ரெப்போ வட்டி விகிதம் அதாவது ‘Repo Rate’ குறைந்தது 50 அடிப்படை புள்ளிகளாவது உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் ஒரு சதவீதம் வரை குறைக்கப்பட்ட வட்டி விகிதம், இப்போது போர்ச் சூழலால் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது 5.25 சதவீதமாக இருக்கும் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால், வங்கிகள் சாமானிய மக்களுக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டியை உடனடியாக உயர்த்தும். இதன் நேரடி விளைவாக, நீங்கள் வங்கிக்குக் கட்டும் வட்டித் தொகை அதிகரித்து, உங்கள் கையில் இருக்கும் சேமிப்பு குறையும் சூழல் உருவாகும்.
ஜூன் மாதத்தில் இந்த உயர்வு ஒருவேளை தவிர்க்கப்பட்டாலும், ஆகஸ்ட் மாதக் கூட்டத்தில் வட்டி விகிதம் ஏறுவது உறுதி என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள். கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி என இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறும் என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதைத் தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை. எனவே, கடன் வாங்கத் திட்டமிடுபவர்களும், ஏற்கனவே கடன் சுமையில் இருப்பவர்களும் தங்களது நிதித் திட்டமிடலை இப்போதே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். உலகப் போரின் எதிரொலி இப்போது உங்கள் வீட்டுச் சமையலறையையும், பணப்பையையும் பதம் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
