SBI, HDFC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ரிசர்வ் வங்கியின் அதிரடி ‘குட் நியூஸ்’!

நீங்கள் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி அல்லது ஐசிஐசிஐ போன்ற வங்கிகளின் வாடிக்கையாளரா? ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறுவது என்பது இதுவரை மிகப்பெரிய தலைவலியாகவே இருந்து வந்தது. பழைய கணக்கில் கொடுத்து வைத்திருந்த மாதத் தவணை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவற்றை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்குள் பல படிவங்களை நிரப்பி, வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அலைந்து போதும் போதும் என்று ஆகிவிடும்.

ஆனால், இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு மிகப்பெரிய ‘குட் நியூஸை’ வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எளிமையாகச் சொன்னால், நாம் எப்படி ஒரு சிம் கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மொபைல் நம்பரை மாற்றாமல் ‘போர்ட்டபிலிட்டி’ வசதி மூலம் மாறுகிறோமோ, அதேபோல இனி உங்கள் வங்கிக் கணக்கையும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மிக எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த ‘PaSS’ திட்டத்தின் மூலம், உங்கள் பழைய வங்கிக் கணக்கில் இருக்கும் அனைத்துப் பணப் பரிவர்த்தனை விவரங்களையும் எவ்வித சிரமமும் இன்றி புதிய வங்கிக் கணக்கிற்குத் தானாகவே மாற்றிக்கொள்ள முடியும். இதில் ‘முழுமையான மாற்றம்’ அல்லது உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் மாற்றிக்கொள்ளும் ‘பகுதி மாற்றம்’ என இரண்டு வசதிகள் இருக்கும். இதனால் இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய படிவங்களை நிரப்பி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் போது ஏற்படும் குழப்பங்கள் இனி இருக்காது. தவணைத் தொகையைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் உங்களது சிபில் ஸ்கோர் (CIBIL Score) போன்ற பிரச்சனைகளுக்கும் இது நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும். எங்குச் சிறந்த வட்டி விகிதம் மற்றும் நல்ல சேவை கிடைக்கிறதோ, அங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த வங்கிக்குத் தடையின்றி மாறலாம். இது வங்கிகளுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டியையும் உருவாக்கும்.

இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களே தற்காலிகமாக ‘On’ அல்லது ‘Off’ செய்துகொள்ளும் புதிய வசதி வரவுள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத நேரங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை நீங்களே முடக்கி வைத்து மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஒருவேளை ஆன்லைன் மோசடி நடந்தால், அதற்குப் பணத்தை அனுப்பிய வங்கியும், மோசடி நபர் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் கூட்டாகப் பொறுப்பேற்கும் புதிய விதியும் அமலுக்கு வரவுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஆர்பிஐ-யின் இந்த புதிய மாற்றங்கள் சாமானிய மக்களின் வங்கிப் பயன்பாட்டை மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றப்போகிறது என்பதுதான் நிதர்சனம்.

Related News

Latest News