உலக அரசியலில் நிலவி வரும் ஈரான் – அமெரிக்கப் போர், தற்போது ஒரு மிக இக்கட்டான நிதி நிலையை எட்டியுள்ளது. இந்தப் போருக்காக அமெரிக்கா இதுவரை சுமார் 29 பில்லியன் டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 பில்லியன் டாலராக இருந்த இந்தச் செலவு, இப்போது அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. போருக்காகச் செலவிடப்படும் இந்த இமாலயத் தொகை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மறுபுறம், போரின் நேரடித் தாக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் சராசரி விலை 3.88 டாலராக உயரும் என அந்நாட்டின் எரிசக்தித் துறை புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
இது சாதாரண அமெரிக்கக் குடும்பங்களின் பட்ஜெட்டைத் துண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு கருத்து இப்போது உலக அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
“ஈரான் உடனான ஒப்பந்தத்தை நோக்கி நான் நகரும்போது, அமெரிக்கர்களின் நிதி நிலைமையைப் பற்றி நான் யோசிப்பதில்லை” என்று அவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தம் என்பது, மிக மிக பலவீனமான ஒரு நிலையில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் மீண்டும் நேரடி மோதல் வெடிக்கலாம் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதற்றமான சூழலில், அதிபர் ட்ரம்ப் தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஈரான் விவகாரம் குறித்து மிக நீண்ட விவாதங்களை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு இந்தப் பிரச்சினையில் பெரிய பங்கு இல்லை என்று ட்ரம்ப் ஒருபுறம் கூறினாலும், ராஜதந்திர ரீதியாகச் சீனாவின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்.
பென்டகன் கொடுத்த புள்ளிவிவரங்கள் மற்றும் எரிசக்தித் துறையின் எச்சரிக்கைகள் என அனைத்தும் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சவாலை முன்னிறுத்துகின்றன. ஒருபுறம் அசுர வேகத்தில் உயரும் போர்ச் செலவுகள், மறுபுறம் விண்ணை முட்டும் எரிபொருள் விலை என இரண்டுக்கும் நடுவில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தத்தளித்து வருகிறது. இந்த மோதல் ஒரு நிரந்தர முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்குமா என்பதுதான் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் தற்போதைய கவலையாக உள்ளது.
