சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்பதால் பிற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. இதற்கிடையே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி, விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர், ” திமுக உடனான கூட்டணி என்பது 2026 தேர்தலுக்கானது. தற்போது பேரவைத் தேர்தல் முடிந்து விட்டது. பாஜக நுழையக்கூடாது என்பதே முக்கியம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கிரிஸ் சோடங்கர் அறிவிப்பார்,” என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தநிலையில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்து, தவெக தலைவர் விஜய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் விஜய், ” சிலபல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் சார் தன்னுடைய பையில் போட்டுக் கொண்டார்,” என்று பேசியிருக்கிறார். தேர்தலுக்கு முன் பணத்துக்காக காங்கிரஸ் விலைபோனதாக குற்றஞ்சாட்டிய விஜய், தற்போது ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியிடமே ஆதரவு கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
