விஜய்யின் ‘தங்க திட்டங்கள்!’ ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் தேவை! தாக்குப்பிடிக்குமா தமிழக நிதிநிலை?

விஜய் ஆட்சி அமைக்கும் வாய்ப்பின் விளிம்பில் நிற்கும் நிலையில், அவரது தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற தங்க நலத்திட்டங்கள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிதி மற்றும் வளங்கள் எங்கிருந்து கிடைக்கும் என்ற கேள்வி அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


தேர்தல் அறிக்கையில் விஜய் இரண்டு முக்கிய தங்க நலத்திட்டங்களை அறிவித்திருந்தார். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குக் குறைவாக உள்ள குடும்பங்களின் மகள்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி, இதற்கான செலவு ஒரு பயனாளிக்கு ஒரு லட்ச ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.


தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் மணப்பெண்களுக்கு தங்கம் வழங்க வேண்டிய நிலை உருவாகலாம். இதற்காக ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் தேவைப்படும் என்றும், ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்படுகிறது.


இதனுடன் மாதாந்திர நிதியுதவி, இலவச எரிவாயு சிலிண்டர், வேலையற்றோருக்கான உதவித்தொகை உள்ளிட்ட பிற வாக்குறுதிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, மாநில நிதிச்சுமை கணிசமாக உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டங்களை நிதிநிலையை பாதிக்காமல் செயல்படுத்துவது விஜய்க்கு மிகப்பெரிய நிர்வாக சவாலாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.

Related News

Latest News