‘முதலமைச்சராக விஜய்..!’ பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. சினிமா திரையில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த தளபதி விஜய், இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து, விஜய் தலைமையிலான அரசு அமையவிருக்கும் இந்த வேளையில், சினிமாவுக்கும் அரசியலுக்குமான அந்த பிரம்மாண்ட நிதி மாற்றம்தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனது முதல் படமான ‘வெற்றி’ திரைப்படத்திற்கு வெறும் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய், தனது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு கிட்டத்தட்ட 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றார். வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் 200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய ஒரு உச்ச நட்சத்திரம், இப்போது மக்கள் சேவைக்காக அந்தப் பெரும் வருவாயைத் தியாகம் செய்துவிட்டு, மாதத்திற்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அதாவது வருடம் 200 கோடி சம்பளம் வாங்கியவர், இனி வருடம் 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறப்போகிறார். வருமானம் குறைந்தாலும், அவர் சுமந்திருக்கும் பொறுப்பு மிகப்பெரியது. 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்கிற லட்சிய இலக்கோடு அவர் களம் காண்கிறார். ஒரு முதலமைச்சராக அவருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ சலுகைகளும் கவனிக்கத்தக்கவை.

குண்டு துளைக்காத வாகனம், இசட் பிளஸ் பாதுகாப்பு, அரசு இல்லம், ஹெலிகாப்டர் வசதி மற்றும் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீடு என அனைத்தும் அரசு சார்பில் வழங்கப்பட உள்ளன. விஜய்யின் சொத்து விபரங்களைப் பொறுத்தவரை, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின்படி, 404 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 220 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் அவரிடம் உள்ளன.

மொத்தமாக 600 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்போடு, சினிமாவுக்கு முழுமையாக முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர மக்கள் சேவகராக மாறுகிறார் விஜய். சினிமாவில் ‘ஜனநாயகன்’ படத்தோடு தன் பயணத்தை முடித்தவர், நிஜ வாழ்க்கையில் ஒரு உண்மையான ஜனநாயக நாயகனாகத் தமிழ்நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தேசமே காத்திருக்கிறது.

Related News

Latest News