மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா காமேனி விடுத்திருக்கும் அறிக்கை உலக நாடுகளை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பெர்சிய வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு “புதிய அத்தியாயம்” தொடங்கவிருப்பதாக அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற ராணுவ மோதல்களில் அமெரிக்கா அடைந்திருப்பது ஒரு “அவமானகரமான தோல்வி” என்று வர்ணித்துள்ள அவர், வளைகுடா பிராந்தியத்தில் அந்நிய ஆதிக்க சக்திகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் பெர்சிய வளைகுடா தினத்தை முன்னிட்டு அரசு ஊடகத்தில் உரையாற்றிய மொஜ்தபா காமேனி, பிராந்தியத்தின் பாதுகாப்பு இனி ஈரானின் கைகளில்தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஈரானின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் காக்கத் தங்களின் படைகள் கடந்த காலங்களில் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா போன்ற “ஆதிக்க சக்திகளின்” கைகளை வளைகுடாப் பகுதியில் இருந்து அகற்றவே தங்களின் புரட்சி உருவானது என்று கூறினார். கடந்த 60 நாட்களாக அமெரிக்கா நடத்திய ராணுவக் கூட்டணியின் மிகப்பெரிய தாக்குதல்கள், ஈரானின் உறுதியைக் குலைக்க முடியவில்லை என்பதையும், மாறாக அமெரிக்காவின் தோல்வியையே உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் பேசினார்.
முக்கியமாக, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், அவை ஈரானின் “தேசிய சொத்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதைப் பாதுகாப்பதில் எந்தவொரு சமரசமும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், நீண்ட காலமாக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு அடிபணிந்து மவுனமாக இருந்த நிலையில், கடந்த அறுபது நாட்களில் ஈரானியப் படைகளின் வீரம் மற்றும் விழிப்புணர்வை உலகமே பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஆதிக்கம் இனி இந்தப் பகுதியில் எடுபடாது என்பதையும், அதைத் தடுப்பதில் ஈரானிய ராணுவம் மற்றும் புரட்சிகரப் படையான ஐ.ஆர்.ஜி.சி (IRGC) தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் என்பதையும் அவர் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மொஜ்தபா காமேனியின் இந்த அதிரடிப் பேச்சு, ஈரான் தனது ராணுவ பலத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, வளைகுடாப் பகுதியில் ஈரானின் ஆதிக்கம் புதிய வடிவம் எடுக்கப்போகிறது என்ற அவரது வார்த்தைகள், உலக அரசியலில் அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றங்களுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
